நீதிமன்ற படியேறிய கெஹல்பத்தர பத்மேவின் தாயார்! தாக்கல் செய்த மனு
பாதாள உலக குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், தனது மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த தடுப்புக்காவல் சட்டவிரோதமானது என்றும், ஆட்கொணர்வு மற்றும் நீதிமன்றத்தின் ரிட் அதிகார வரம்பு மூலம் நிவாரணம் கோருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை தனது மகன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின்(சிஐடி) காவலில் இருந்து வேறு எந்த இடத்திற்கும் மாற்றப்படுவதைத் தடுக்க அவர் இடைக்கால உத்தரவையும் கோரியுள்ளார்.
சந்தேக நபரின் இடமாற்றம்
அதன்படி, மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் உண்மைகள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை சந்தேக நபர் இடமாற்றம் செய்யப்பட்ட மாட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், சந்தேக நபர் சிஐடி காவலில் இருக்கும் வரை அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டு வருவதாக அரச சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த மனுவானது, சிரேஷ்ட சட்டத்தரணி சமீர ஹபுதந்திரியின் அறிவுறுத்தலின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு மனுதாரர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்னா மற்றும் சட்டத்தரணிகள் செனல் மதுகம, நலகா சமரக்கோன் மற்றும் ராஜிந்திர கண்டேகெதர ஆகியோரும் ஆதரவளித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை ஒக்டோபர் 23 ஆம் திகதி விசாரிக்க ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
