கெஹெலியவின் மற்றைய மகளும் பிணையில் விடுதலை!
புதிய இணைப்பு
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மற்றைய மகளும் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் இன்று (20) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
134 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும் மருமகனும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (19) முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பிணையில் விடுதலை
இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஒரு மகளும், மருமகனும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ள நிலையில் மற்றைய மகள் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியுள்ளார்.
இதனால் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மற்றைய மகள் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்லவின் மற்றைய மகள் பிணை நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றியதால், நீதிமன்ற உத்தரவின் கீழ் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எட்டாம் இணைப்பு
கைதான கெஹெலியவின் மகள்கள் இருவர் உட்பட மருமகனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் அவரது மருமகனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
ஏழாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன் மற்றும் இரண்டு மகள்கள் இன்று (19) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
இதேவேளை, நேற்று (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் சிறை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும், பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜந்தாம் இணைப்பு
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
இதையடுத்து, வழக்கு நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு வந்த நிலையில் அங்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர்.
இந்த சந்தேக நபர்கள் 97.35 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர்களின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு தகவல் அளித்ததாகவும், அதன்படி இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சரின் மனைவிக்கும், மூன்றாவது சந்தேக நபரான மகளுக்கும் சொந்தமான தலா 30 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு நிலையான வைப்பு கணக்குகள் விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த சந்தேக நபர்களுக்குச் சொந்தமான 150 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்ட மூன்று வங்கிக் கணக்குகள் வேறு நபர்களின் பெயர்களில் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார்.
எவ்வாறாயினும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி மற்றும் மகள் சந்துல ரமாலி ரம்புக்வெல்ல ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 நான்காம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமைத் தொடர்ந்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மூவரிடம் இன்று (18) வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🛑 மூன்றாம் இணைப்பு
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இன்று (18) பிற்பகல் அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவர்களைக் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) முன்னிலையாகி இருந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (18) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி இறக்குமதி
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு முன், இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் கடந்த மூன்றாம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
