அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை : பொதுமக்கள் விசனம்
நேற்றைய தினம் (30.06.2025) அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்திருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் விலைக் குறைப்பை எதிர்பார்த்திருந்த வேளையில், விலை அதிகரித்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய நேற்று (30.06.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தங்களை அறிவித்தது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.
மேலும் 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாக அதிகரிக்கப்ட்டது.
பொருளாதார நெருக்கடி
மேலும் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெட்ரோல்95 ஒக்டேன் யூரோ 4 லிட்டர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து பொது மக்கள் பல்வேறு விதமான நெருக்கடியினை சந்தித்து வரும் நிலையில் அடிக்கடி எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதனால் மக்களின் வாழ்க்கை சுமையும் மன வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் இதனால் தங்களுக்கு தொழில் செய்ய முடியாது பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பொது போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகள், உள்ளிட்ட அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கு திணறி வரும் நிலையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால் மீண்டும் பொது போக்குவரத்து, எரிவாயு, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.
மக்களின் வாழ்வாதாரம்
இந்த நிலையில் எவ்வித சம்பளமும் அதிகரிக்கப்படாத நிலையில் மக்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டு மேலும் மேலும் மக்கள் மன அழுத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது பாரிய அளவில் வெறுப்பு ஏற்படுவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் முச்சக்கர சாரதிகள் மற்றும் வாகன சாரதிகள் விலையேற்றம் காரணமாக தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்த அரசாங்கம் கவனமெடுத்து எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
