பலமான நாடுகளைப் போன்று மோசமான நிலை இலங்கையில் ஏற்படுமா? விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கொரோனா தொற்று காரணமாக வேறுநாடுகளில் ஏற்பட்டது போன்ற நிலைமை இங்கு ஏற்பட இடமளிக்க முடியாது. பொதுமக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படத் தவறினால் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர நேரிடலாமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கொஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
மக்களை முடிந்தளவு அறிவூட்டி பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு கோர வேண்டும்.
பலமான பலநாடுகளுக்கு ஏற்பட்டது போன்ற நிலை ஏற்பட இடமளிக்க கூடாது. திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
தவறினால் அதற்கும் மீள சட்ட திட்டங்களை கொண்டு வர நேரிடும். மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் முழு நாடும் பாதுகாக்கப்படும். 30 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டங்கள் ஊடாக கட்டுப்பாடுகளை விதிக்காது பொதுமக்களிடம் விடுக்கும் கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்காவிட்டால் சட்டதிட்டங்களை கொண்டுவர நேரிடும்.
போதுமானஅளவு அவசர சிகிச்சை கட்டில்கள் உள்ளன. அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் குறைபாடு காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.