படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை!
முல்லைத்தீவு (Mullaitivu) - கேப்பாப்புலவில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்கள் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று (11) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கோரிக்கையினை முன்வைத்தனர்.
இதன்போது “மேதகு ஐனாதிபதி கேப்பாப்புலவு மக்களின் காணிகளை உடன் விடுவியுங்கள்“ என்ற பதாகையினை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டனர்.
அரச அதிபரிடம் கோரிக்கை
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செலயத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் கேப்பாப்புலவு மக்கள் ஐனாதிபதி செயலகத்திற்கு சென்று அங்கு கலந்துரையாடிய போது காணி விடயம் தொடர்பாக கேட்டபோது அது தொடர்பில் அங்கு எந்த தகவலும் இல்லை என ஐனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமையை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினர்.
காணி விடுவிப்பு
ஐனாதிபதி செயலகத்திடம் இருந்து கேப்பாபிலவு காணிகள் தொடர்பிலான விபரங்களை திரட்டுமாறு மாவட்ட செயலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கேப்பாப்புலவு மக்களிடம் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான செயற்பாடுகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும் அத்தோடு தம்மால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் அரச அதிபர் மக்களுக்கு காண்பித்தார்.
இதேவேளை கேப்பாப்புலவு மக்களின் 55 குடும்பங்களின் 59.5 ஏக்கார் காணி இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
