கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்! இராணுவ உயர் அதிகாரியை சந்தித்த மக்கள் ஏமாற்றத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகம் உள்ளிட்ட இராணுவ பிரிவுகளால் அபகரிக்கப்பட்ட கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான அவர்களின் பூர்வீக நிலமான 62 குடும்பங்களின் 171 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தார்கள்
இந்த நிலையில், நேற்று (27) தங்கள் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபுலவு மக்கள் கேப்பாபுலவு இராணுவ படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இராணுவ புலனாய்வாளர்கள்
நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தளபதியிடம் தங்கள் கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்து கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை முன்னெடுத்த வேளை போராட்டத்தினை நிறுத்த இராணுவத்தளபதியினை சந்திக்க போராட்ட மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கையினை இராணுவ புலனாய்வாளர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இதற்கமைய மாலை 3.00 மணிக்கு இராணுவத்தளபதியினை சந்திக்கவுள்ளதாக நேரம் கொடுத்து அதற்காக 5 பேரின் பெயர் விபரங்கள் அடையாள அட்டை இலக்கம் என்பன போராட்டகாரர்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கவனயீர்ப்பினை நிறைவிற்கு கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த நிலையில் மாலை 5.00 மணியளவில் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்குள் இருந்து உலங்கு வானூர்தி மூலம் இராணுவத்தளபதி வெளியேறியுள்ளதை அவதானிக்கமுடிந்த வேளையில் போராட்ட காரர்களை இராணுவ தளபதியினை சந்திக்க அழைத்து சென்றுள்ளார்கள்.
ஏமாற்றத்தில் மக்கள்
அங்கு வன்னி பிராந்தியத்தின் உயர் அதிகாரி ஒருவரே இவர்களை சந்தித்துள்ளார்
இரவு 7.45 மணிவரை சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது குறித்த இராணுவ உயர் அதிகாரி கேப்பாபுலவு இராணுவமுகாம் அகற்றப்படாது என்றும் அந்த பகுதியில் உள்ள மக்களின் காணிகள் எவ்வளவோ அவ்வளவு காணிகளை முகாமிற்கு அருகில் உள்ள பகுதிகளில் கொடுத்து வீடுகளை கட்டித்தருவதாக தெரிவித்துள்ளார்.
கேப்பாபுலவில் படை முகாம் இருக்கும் என்றும் மாற்றுக்காணி வழங்கவுள்ளதாகவும் அரசாங்கம் நிறைய செலவு செய்து படைமுகாமினை அமைத்துள்ளது என்றும் அதற்கான வரைபடங்களை காட்டி விளக்கியுள்ளதாகவும் இரணுவ உயர் அதிகாரியுடன் பேச்சில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்
பேச்சுக்களில் கலந்துகொண்ட கேப்பாபுலவு மக்கள் இராணுவ அதிகாரியுடன் முரண்பட்ட நிலையில் எங்கள் காணிதான் எங்களுக்கு வேண்டும் என்று தெரிவித்து பேச்சுக்களை முறித்து வெளியேறியுள்ளதுடன் மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அதிகாரி மட்டுமல்ல இன்னும் மேல் அதிகாரிகளுடன் கதைத்து முடிவு எடுக்க நேரகாலம் தேவை என்றும் அதற்கான காலஅவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளதாக பேச்சுக்களில் கலந்துகொண்ட கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |