துன்பத்தில் துவண்டவேளை அடித்த அதிஷ்டம் - கடும் மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
வங்கியில் பெற்ற கடன்
வீடு கட்டுவதற்காக வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வீட்டை கையகப்படுத்தப்போவதாக வங்கி அறிவித்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த குடும்பத்துக்கு அவர்கள் வாங்கிய அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு கைகொடுத்த சம்பவமொன்று நடந்துள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் மைநகாப்பள்ளி என்னும் பகுதியை சேர்ந்தவர் பூங்குஞ்சு (Pookkunju). இவர் மீன் விற்பனை செய்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டை கட்டுவதற்காக அவர் வங்கியில் இருந்து கடன் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், மொத்தமாக இரண்டு இலட்சம் ரூபாய் மட்டுமே பூங்குஞ்சு கட்டி இருந்ததால் மீதி பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால், அவரது வீட்டை கையகப்படுத்தப்போவதாக வங்கியில் இருந்து அறிவித்தல் ஒன்று வந்துள்ளது. இதனைக் கண்டதும் தனது குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்து எண்ணி வேதனையிலும் ஆழ்ந்துள்ளார் பூங்குஞ்சு.
வாழ்க்கையையே திருப்பி போட்ட சம்பவம்
அப்படி ஒரு சூழ்நிலையில், வங்கி அறிவிப்பு வந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் பூங்குஞ்சுவின் வாழ்க்கையையே திருப்பி போடும் அளவுக்கு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதிஷ்ட இலாப சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட பூங்குஞ்சு, வீட்டிற்கு வருவதற்கு முன்பாக அதிஷ்ட இலாப சீட்டு ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது தான், தனது வீட்டை வீட்டை கையகப்படுத்தப் போவதாக அறிவித்தல் ஒன்றும் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வருத்தத்தில் இருந்த பூங்குஞ்சுவிற்கு ஒரு மணி நேரம் கழித்து அவரது சகோதரரின் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில், பூங்குஞ்சு வாங்கிய அதிஷ்ட இலாப சீட்டுக்கு 70 இலட்சம் ரூபாய் பரிசு விழுந்ததாக சகோதரர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்ததும் உச்சகட்ட ஆனந்தத்தில் மூழ்கிப் போனார் பூங்குஞ்சு.
வங்கி அறிவித்தலால் வேதனையில் இருந்தவருக்கு ஒரு மணி நேரம் கழித்து அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் 70 இலட்சம் ரூபாய் பரிசு விழுந்த விஷயம், அவரது வாழ்க்கையையே தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. 9 லட்ச ரூபாய் கடன் இருந்த நிலையில், அதன் பல மடங்காக அந்த நபருக்கு பரிசு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.