புலிக்குளம் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாய்வு
கிளிநொச்சி, அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி செய்தார்.
புலிக்குளத்திலிருந்து அறிவியல்நகர் வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான கோரிக்கை, அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினரால் யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் மேலதிக இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் மூலம், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றிருந்தார்.
80 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை உடனடியாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக குளத்திலிருந்து அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகம் வரையிலான வாய்க்காலை புனரமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, இதற்கென 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு கிலோமீற்றர் நீளத்துக்கு இவ்வாறு வாய்க்கால் மூலம் நீர் அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கு எடுத்துவரப்படும்போது, இடையில் உள்ள மலையாளபுரம், பொன்னகர் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர்வளமும் அதிகரித்து கிணறுகளில் நீர்க்கொள்ளளவும் கூடும்.
இதன்போது, புலிக்குளத்திலிருந்து அறிவியல்நகர் வளாகத்துக்குப் பெறப்படும் நீர், விவசாய பீடத்தின் விவசாய முயற்சிகளுடன், பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் குடிநீர் தேவையையும் நிறைவுசெய்யும் வகையில் திட்டமிடப்படவேண்டும் என்று, பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையப் பிரதிப் பணிப்பாளர், விஞ்ஞானி கலாநிதி அரசகேசரி சுட்டிக்காட்டியதை, பல்கலைக்கழக பீடாதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
ஏற்கனவே அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் உள்ள நிலத்தடி நீரைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கோடைகாலத்தில் தடைப்பட்டு சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டு வருவதால், புலிக்குளத்திலிருந்து பெறப்படும் நீரைக் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நீர் சுத்தீகரிப்புத் தொகுதியும் அமைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, புலிக்குளத்தை அண்டிய விவசாய வயல் நிலமான சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பையும் அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்துக்கே வழங்கி, பொதுமக்களுடன் இணைந்த விவசாய நடவடிக்கையில் பல்கலைக்கழகம் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, அறிவியல்நகர் பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி, அயல் கிராமங்களான பொன்னநகர் மற்றும் மலையாளபுரம் ஆகிய பகுதிகளின் நீர்வளமும் அதிகரித்து, அந்தக் கிராமங்களின் மக்களும் அதிக பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.