கிம் ஜோங் உன் ரஷ்யா செல்வது ஏன்!
ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தொடருந்தில் புறப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1,180 கிலோ மீற்றர் தொலைவு உள்ள நிலையில் கிம் ஜோங் உன், விமானத்தில் செல்லாமல், தொடருந்தில் பயணம் செய்வது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
குறித்த தொடருந்தில், ரஷ்யாவுக்கு அளிக்கவிருக்கும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இது ரஷ்யா - வடகொரியா இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடருந்து பயணம்
இந்நிலையில், பல வல்லரசு நாடுகளுக்கும் சவால் விடும் வகையில் இராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டு வரும் கிம் ஜோங் உன்னின் தொடருந்து பயணத்திற்கு காரணம் அவர்களது பாரம்பரியம் தான் என்று கூறப்படுகிறது.
வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங், வழக்கமாக கவச தொடருந்தில் தான் பயணிப்பார் எனவே அதே பாரம்பரியத்தை பின்பற்றித்தான் கிம் ஜோங் உன் தொடருந்தில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடருந்து என்று சொன்னால் வெறும் சாதாரண தொடருந்தாக இல்லாமல் 20 பெட்டிகளைக் கொண்டு, குண்டு துளைக்காத கவசப் பெட்டிகளைக் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டு வீசினாலும், ரொக்கெட் லோஞ்சரை கொண்டு தாக்கினாலும் எதுவும் செய்ய முடியாத அளவில் இதில் பாதுகாப்பு ஆயுதங்களும் போதுமான அளவில் இருப்பதோடு ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் வசதி கூட இருக்கும் இந்த தொடருந்து மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இரு தலைவர்களின் சந்திப்பு
மேலும், இந்த தொடருந்து வடகொரியாவிலிருந்து, ரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததும், அந்த நாட்டின் தண்டவாளத்துக்கு ஏற்ற வகையில் சக்கரங்கள் மாற்றப்பட வேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம் ஜோங் உன், பியோங்யாங்கிலிருந்து தொடருந்து மூலம் புறப்பட்டிருப்பதாகவும், அந்த தொடருந்தில் மூத்த அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள், மற்றும் இராணுவ வீரர்கள் இருப்பதாகவும் இன்று (12) இரு தலைவர்களின் சந்திப்பு நிகழும் என்றும் அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு எதிராக
மேலும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதேவேளை வடகொரியாவின் வடகிழக்கு எல்லை வாயிலாக தொடருந்தில் கிம் ஜோங் உன் பயணம் செய்து ரஷ்யாவுக்கு வரவிருப்பதாக தென்கொரிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யா ஆயுதப் படையை பலப்படுத்தும் வகையில், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
ராணுவ ரீதியிலான நெருக்கம்
தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதற்கான பலனை வடகொரியா சந்திக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுளிவியன் எச்சரித்திருந்தார்.
மேலும்,ரஷ்யாவிலுள்ள வாக்னர் படைக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போருக்குப் பிறகு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அதிகரித்து வரும் இராணுவ ரீதியிலான நெருக்கம் சா்வதேச அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
வட கொரியாவுடன் ‘அனைத்து துறைகளிலும்’ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அதிபா் புடின் கூறியுள்ளது சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.