கிவுல் ஓயாவால் ஆபத்தை உணராத மட்டக்களப்பு பண்ணையாளர்கள்!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களுக்கான மேய்ச்சல் தரை நிலங்களை கோரி பல வருடங்களாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
மறுபுறம் மட்டக்களப்பு எல்லையில் சிங்கள சட்டவிரோத குடியேற்றவாசிகளை குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சிகள் தற்போது மகாவலி பி வலய அபிவிருத்தி திட்டம் ஊடாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில்.
போராட்டத்தில் ஈடுபட்ட வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை அரசிடம் கொண்டு போய் அடகு வைக்கும் வேலையை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கின்றார்களா என்ற கேள்வி எழுகிறது?
மட்டக்களப்பு எல்லையை ஊடறுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 70 வீத நிலப்பரப்பை யும், பொலனறுவை,அம்பாறை மாவட்டத்தின் 30 வீத நிலப்பரப்பை இணைத்து மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட பி வலய திட்டம் தற்போது மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.
மகாவலி பி வலய அபிவிருத்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மகாவலி பி வலய அபிவிருத்தி திட்டம் அதன் ஊடாக மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு ஏற்படப்போகும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்காது தேசிய மக்கள் சக்தி அரசுடன் பொங்கல் விழா கொண்டாடும் அளவுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பொங்கல் விழா நிகழ்வை புறக்கணிப்பதாக தமிழரசுக் கட்சி அறிக்கை விட்டதோடு. ஜனாதிபதியின் பொங்கல் விழாவுக்கு செல்லாது பல விமர்சனங்களை முன்வைத்து வந்தது.
ஆனால் மட்டக்களப்பில் அதே தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியின் விவசாய கால்நடை அமைச்சரின் இணைப்பாளருடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழரசுக் கட்சிக்குள் உள்ள ஒரு பிரிவினர் தற்போது அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கிய உறவில் உள்ளமை கடந்தகால செயற்பாடுகள் மூலம் மெல்ல மெல்ல தெரியவருகிறது.
அண்மையில் கிவுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக 2500 குடும்பங்களை குடியேற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் விவசாய அபிவிருத்தி குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள மக்களை குடியேற்றி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்படி கிவுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக முன்னெடுக்கப்பட உள்ளதாக தற்போது வடக்கில் உள்ள மக்கள் போராட்டங்களை நடாத்த தயாராகி வருகிறது.
இலங்கை வரலாற்றில் மகாவலி அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கு என்று கூறப்பட்டாலும். மகாவலி அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரம் மற்றும் விகிதாசார அடிப்படையிலான விவசாய குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள். வடகிழக்கு தமிழ் மக்களின் நிலங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான சட்ட ரீதியான அனுமதிகளை கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் பி வலய செயற்பாடுகள், அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்துகள் குறித்து சிந்திக்காது மயிலத்தமடு பகுதிக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் சென்று பொங்கல் விழா கொண்டாடும் அளவுக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி அரசுடன் உறவில் இருக்கின்றனர்.

அரசாங்கத்திடம் தங்களது உரிமைகளை கேட்டு போராடிவரும் பண்ணையாளர்கள், தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார் என்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை அழைத்து பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடி மகிழும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போராட்டத்தின் வலி வேதனைகள் தெரிய வாய்ப்பில்லை ஆனால் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் எதற்கானது அவர்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் அவர்களுக்கு தெரியாதா?
போராடி தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டிய நீங்கள் பொங்கல் விழா கொண்டாடி அரசுடன் உறவு கொண்டாடுவதா?
கிவுல் ஓயா சிங்கள வீட்டு திட்டம் முதல் கொண்டு மட்டக்களப்பு மயிலத்தமடு சிங்கள விவசாய குடியேற்ற திட்டம் வரை அனைத்துமே மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக் கிராமமான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலங்களை அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய அபிவிருத்திக்கான பகுதிகளாக அடையாளப்படுத்தி அதற்கான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
சுமார் கிட்டத்தட்ட 25000 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட மயிலத்தமடு மாதவனை காட்டுப் பிரதேசத்தில் வெறுமனே 3000 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை மட்டும் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கீடு செய்து விட்டு மீதி உள்ள காணிகளை அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுகிறது?
மயிலத்தமடு மாதவனை மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரத்திற்குள் இருக்கும் வரை அது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள் என யாரும் உரிமை கொண்டாட முடியாது.
அந்த வகையில் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு மூவாயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும் மகாவலி அபிவிருத்தி திணைக்களம் மீதம் உள்ள காணிகளை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதாவது பொலன்னறுவை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை ஒன்றிணைத்து விவசாய குடியேற்ற திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகிறது.
மயிலத்தமடு
மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் தற்போது மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக, வீதிகள், குளங்கள், கால்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் மயிலத்தமடு மாதவனை பகுதிகளை பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களுடன் இணைக்கும் வீதிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்படி அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக மேய்ச்சல் தரை நில பிரச்சினை காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் அபகரிக்கப்படப் படப்போகிறது என்பதை மறைத்து அதனை வேறுமனே மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை என்ற வட்டத்துக்குள் அடையாளப்படுத்தி அவர்களுக்கான பிரச்சினைக்கு வேறும் மூவாயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கி தீர்வு காண பலர் முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய குடியேற்ற திட்டம் ஒன்றின் ஊடாக மயிலத்தமடு மாதவனை பகுதிகளில் உள்ள காணிகள் எதிர்காலத்தில் பகிர்ந்தளிக்கப்படப் போகிறது.
அப்போது அந்த பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் குடியேற்ற வாசிகளுக்கும், மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஏற்படும் என்பதோடு நீதிமன்றம் ஊடாக மாடுகளை அடைத்து வளர்க்கும் பண்ணை முறையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்?
அதன் பின்னர் மயிலத்தமடு மாதவனை தமிழ் பண்ணையாளர்கள் மெல்ல மெல்ல நாட்டு இன மாடுகளை வளர்ப்பதை கைவிட்டு, பண்ணை மாடுகளை வளர்க்கு திட்டத்திற்கு உள் வாங்கப்படுவார்கள்.
இதற்காக இந்தியா , பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து மாடுகளை கொண்டு வந்து இலவசமாக கொடுப்பதற்கும், பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வது குறித்தும் ஏற்கனவே இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன.
கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜெயம்பத் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட இருந்த திட்டத்தை தற்போதைய அரசு, எமது நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் ஊடாக முன்னெடுப்பதற்கு தயாராகி வருகிறது.
மிக முக்கியமாக மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை கையாளும் சட்டத்தரணி ஒருவரும், பண்ணையாளர்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசுடன் மிக நெருக்கமாக செயற்படும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இந்திய நிறுவனம், தேசிய மக்கள் சக்தியின் கால்நடை விவசாய அமைச்சின் இணைப்பாளராக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி, மற்றும் ஒரு சட்டத்தரணியும், அவருடன் சேர்ந்து மேய்ச்சல் தரை பிரச்சினையில் ஈடுபட்டுவரும் நிறுவனம் ஒன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து எதுவுமே அறியாத மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் அவர்களுடன் பொங்கல் விழா நடாத்தி மகிழ்சியை கொண்டாடி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைகளை மட்டும் அல்ல வடகிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன தொடங்கி மகிந்த ராஜபக்ச , தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரை தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை அபகரிப்பதற்கு சட்ட ரீதியான திணைக்களமாக மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கான சிறந்த உதாரணமாக கிவுல் ஓயா மகாவலி அபிவிருத்தி திட்டம், மட்டக்களப்பு மயிலத்தமடு மகாவலி அபிவிருத்தி திட்டம் மிகச் சிறந்த உதாரணமாகும்.
சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் அடிமையாகிப் போகும் நமது மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் வரை ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ,இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் தியாகங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |