பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி
முல்லைத்தீவு(Mullaitivu) கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், எட்டாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகார உத்தியோகத்தர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின், மனித உரிமைகள் அலுவலர் ஆகியோர் அகழ்வு பணிகளை கண்காணிப்புச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் தடயவியல் காவல்துறையினர், உள்ளிட்ட தரப்பினரால் பங்குபற்றுதல்களுடன் இந்த எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.
மனித புதைகுழி
அதேவேளை நான்காவது நாளாகவும் நேற்று (12) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின், மனித உரிமைகள் அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகார உத்தியோகத்தர் மத்தியூ ஹின்சன் காணாமல் போனோர் அலுவலக தலைவர் மற்றும் சட்டத்தரணிகளும் அகழ்வு பணிகளை கண்காணிப்புச்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 43மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமையும் இன்றும் சில மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |