மனம்பேரியின் ஆயுதங்களில் கஞ்சிபாணி இம்ரானின் குறியீடு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு மீட்கப்பட்ட தோட்டாக்களில் KPI என்ற குறியீடு காணப்படுவதை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பாதாள உலக குழு தலைவர் கஞ்சிபாணி இம்ரானின் தொடர்பில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல குற்றச்செயல் தொடர்பிலான விசாரணைகளில் KPI என்ற அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக கிளப் வசந்த கொலைச் சம்பவத்தின் kpi என்ற குறியீடுகள் துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் காணப்பட்டிருந்தது.
விசாரணையில் தகவல்
இந்நிலையில் மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில ஆயுதங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
அதன்படி, மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மி.மீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை காவல்துறையினரால் இதன்போது மீட்கப்பட்டன.
பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளப் வசந்த கொலை
இந்நிலையில், இவ்வாறு மீட்கப்பட்ட தோட்டாக்களில் பாதாள உலகக் கும்பல் தலைவரான கஞ்சிபாணி இம்ரானை அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படும் KPI குறியீடு காணப்படுவது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசியல் செயற்பாட்டாளர் கிளப் வசந்த கொலையில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களிலும் இந்தக் குறியீடு பயன்படுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
