'தாயகத்தை சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது' - சுகாஷ்
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் எந்த வடிவத்தில் ஆக்கிரமித்தாலும் அதனை எதிர்த்து போராடவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இருந்து வந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று குருந்தூர் மலை பகுதியை ஆக்கிரமிக்கவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரினவாத ஆக்கிரமிப்பு

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ கொழும்பில் இருந்து வந்திருக்கின்ற விசேட குழு ஒன்று எந்தவிதமான முன்னறிவிப்புக்களும் இன்றி குருந்தூர் மலையை ஆக்கிரமிக்கவுள்ளது என்று நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து உடனடியாக இங்கு வந்திருக்கின்றோம்.
நாங்கள் வந்ததன் பிற்பாடு அதற்கான ஆயத்தங்கள் கைவிடப்பட்டன என்று உணருகின்றோம். ஆனால், வந்த குழுவினர் முல்லைத்தீவிலே முகாம் இட்டு இருக்கின்றனர் என்று எங்களுக்கு நம்பகத்தனமான தகவல்கள் கிடைத்துள்ளது.
வரலாற்றுக் கடமை

தமிழர் தாயகத்தைச் சிங்களப் பேரினவாதம் ஆக்கிரமிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
எந்த வடிவத்தில் ஆக்கிரமிப்பு வந்தாலும் தொடர்ந்து எங்களுடைய முயற்சியையும், எதிர்ப்பையும் காட்டுவதன் மூலமே எங்களுடைய தாயகத்தைப் பாதுகாக்க முடியும். அந்த வரலாற்றுக் கடமையைச் செய்துகொண்டிருப்போம்” என்றார்.