குருவிட்ட சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகள்: வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை
குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்குக் காரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களே எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஒரு கைதியின் தலையிலும் மற்றைய கைதியின் மார்பிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தமையாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
இந்த அமைதியின்மை சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகக் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படை (STF), கலகமடக்கும் பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னரும் நீர்கொழும்பு, மஹர, புதிய மெகசின் மற்றும் பள்ளன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் இதுபோன்ற அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |