பலாலி விமான நிலையத்துக்கு காணி சுவீகரிப்பு! அதிபர் செயலகத்தில் இருந்து வந்த கடிதம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென காணிகளை மீள அளவீடு செய்வது தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுக்குக் கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு முன்பாக அதிபரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு
அதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கென மக்கள் மீளக் குடியேறியுள்ள வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி ஜே/242, கட்டுவன் ஜே/238, கட்டுவன் மேற்கு ஜே/239, குப்பிளான் வடக்கு ஜே/211, மயிலிட்டி தெற்கு ஜே/240 கிராமங்களில் காணி அளவீடுகள் இடம்பெறுகின்றன.
இதற்கு எதிராக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அது தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.
காணி அளவீடுகள்
இதையடுத்து, குறித்த காணி அளவீடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதிக்கு முன்பாக அதிபரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அதிபர் செயலகத்தால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |