பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கு - கிழக்கில் காணி: முதற்கட்டமாக 25 குடும்பங்கள் தெரிவு
இயற்கை பேரனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள மலையக மக்களுக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் மானிடம் பூமிதான இயக்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பான முக்கிய பொதுக்கூட்டமும் நேர்முகத்தேர்வும் நேற்று (29) யாழ். கீரிமலையில் இடம்பெற்றது.
பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றன.
நேர்முகத்தேர்வு
அவர்களில் ஒரு தொகுதியினர் உடனடியாகவும் மற்றும் ஏனையோர் மூன்று மாத காலப்பகுதிக்குள்ளும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறத் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தொடர்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் முதற்கட்டமாக 25 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவர்களில் யாழ்ப்பாணத்தில் நன்கொடையாளர்களால் வழங்கப்படும் காணி மற்றும் முல்லைத்தீவில் அரச காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பயனாளிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் இவ்வாரம் யாழ்ப்பாணம் மற்றும் மாங்குளம் பகுதிகளில் வழங்கப்படவுள்ளன.
மனிதாபிமானப் பணி
இந்த மனிதாபிமானப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்காக பூமிதான இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்:
இதனடிப்படையில்,
- தலைவி: சோதிநாயகி (அறக்கொடையாளர்)
- உப தலைவர்: சிவத்திரு சண்முகரத்தினம் (சைவ மகா சபை தலைவர்)
- ஒருங்கிணைப்பாளர்: மருத்துவர் பரா நந்தகுமார் (மானிடம் அறக்கட்டளை தலைவர்)
- பிராந்திய இணைப்பாளர்கள்: யோகேஸ்வரன் (ஊவா), தினேஷ் (மத்திய மாகாணம்), நிகேதன் (யாழ்), சிவஞானசுந்தரம் (கிளிநொச்சி), யோகனந்தராசா (முல்லைத்தீவு), இந்திரகுமாரி (வவுனியா).

இந்தநிலையில் யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் வழங்கப்படவுள்ள காணிகளுக்காக, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்வரும் (05.01.2026) வரை தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு +94 77 075 6333 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக நிர்வாகக் காரியதரிசியைத் தொடர்புகொண்டு, அந்தந்த மாவட்ட இணைப்பாளர்களின் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |