யாழில் தொடரும் கடற்படையின் அத்துமீறல்- அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மக்களின் காணிகள், கடற்படை முகாம்கள் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக மக்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் யாழில் மக்களின் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் மக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சியில் இன்று கடற்படை ஈடுபட்டுள்ளது.
கடற்படையின் தேவைக்காக வல்லன் பகுதியில் சுமார் 14 ஏக்கர் காணி சுவீகரிப்பிற்காக இன்று அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன. இதற்கு அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில், தமிழ்த்தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசி மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், பொது செயலாளர் கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் சுகாஸ் மற்றும் தவிசாளர் நிரோஸ் ஆகியோரும் குறித்த இடத்தில் பிரசன்னமாகி மக்களுக்கு ஆதரவாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நாளையும் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையினை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதியை அண்மித்ததாக அமைந்துள்ள காணியொன்றும் கடற்படையினரின் முகாம்கள் அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இரண்டு தடவைகள் இக்காணிகளை கடற்படையினர் சுவீகரிக்க முயன்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெறவுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றுகூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.