வடக்கில் காணி அபகரிப்பு விவகாரம் : அரசின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய சுமந்திரன்
வடக்கில் காணி அபகரிப்பு விடயத்தில் அரசாங்கத்தின் சூழ்ச்சி வெளிப்பட்டமையினால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோபமடைவது இயல்பான விடயமேயாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காணிகளைக் கையகப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய இவ்வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சுமந்திரனால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரத்துச்செய்யப்பட்ட வர்த்தமானி
அதுகுறித்த விசாரணைகளை அடுத்து அவ்வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.
அதனையடுத்து அரசாங்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானியின் ஊடாக மேற்குறிப்பிட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி இரத்துச்செய்யப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake), சுமந்திரன் போன்றோர் ரணில் விக்ரமசிங்கவுடன் பணியாற்றியமையினால் அவர்கள் தம்மையும் ரணிலைப் போன்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.
பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்து
அத்துடன் காணி உரித்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தாம் வெளியிட்டவர்த்தமானி அறிவித்தல் அரசியல் மற்றும் இனவாத அடிப்படையிலான கருத்துக்களின் விளைவாக இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்திற்கு சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்திருக்கும் பதிவின் ஊடாகப் பதிலளித்துள்ளதாவது, “அவர்கள் எதனை வேண்டுமானாலும் கூறட்டும். தமது சூழ்ச்சி வெளிப்பட்டமையினால் அமைச்சர் கோபமடைவது இயல்பான விடயமேயாகும்.
அபகரிக்கப்படவிருந்த நிலங்கள் எமது நடவடிக்கைகளின் விளைவாக பாதுகாக்கப்பட்டமையை உறுதிசெய்த அமைச்சருக்கு எமது நன்றிகள். இவ்விடயத்தில் தொடர்ந்தும் அவதானமாகவே இருப்போம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
எதை வேண்டுமானாலும் கூறட்டும். தமது சூழ்ச்சி வெளிப்பட்டதால் அவர் கோபமடைவது இயல்பே! எமது நடவடிக்கைகளினாலேயே அபகரிக்கப்பட இருந்த நிலங்கள் பாதுகாக்கப்பட்டதை உறுதி செய்த அமைச்சருக்கு எமது நன்றிகள். தொடர்ந்தும் அவதானமாகவே இருப்போம்… https://t.co/a8Ric9qZbr
— M A Sumanthiran (@MASumanthiran) July 3, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
