நாட்டின் பல மாவட்டங்களுக்கு சீறற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை
நாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (16) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடும் மழையுடனான வானிலை
தற்போது நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மலைச்சரிவுகளில் திடீர் பிளவுகள் தோன்றுதல், நிலம் உள்வாங்குதல், மரங்கள் சாய்வடைதல் அல்லது புதிய நீரூற்றுகள் உருவாகுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், அபாய நிலை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
நாளைய தினம் சனிக்கிழமையும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை , யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞன் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மின்னல் தாக்கங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த நிலைமைகளை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடும் மழை பெய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்தி - தீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |