இலங்கை தமிழரின் அரசியல் தீர்வில் புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு குறித்து கவனம் ! சாணக்கியன்
கொமன்வெல்த் அமைப்பின் 65 ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 500 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு நாடுகளின் தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். குறிப்பாக தமிழக சட்ட பேரவையின் சபாநாயகர் எல்.ஏ.அப்பாவுவை சாணக்கியன் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது தமிழ் நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையிலான அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.
மலேசியத் தமிழர்கள்
இலங்கைக்கு தமிழக அரசு வழங்கி வரும் உதவித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ்ஜையும் சாணக்கியன் சந்தித்துப் பேசியுள்ளார்.
மலேசியத் தமிழர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்களுடைய பங்களிப்பினையும், தமிழ் அரசியல்வாதிகளின் பங்களிப்பினையும் எவ்வாறு பெற்றுக்கொள்ளவது என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது.
தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது
குறிப்பாக உலக நாடுகள் முழுவதிலும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் அரசியல் உரிமைகளை பெற்றுகொள்வதற்கு எவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பது என்பது குறித்து பேசியிருந்தேன்.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களை வகுப்பது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தியிருந்தேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக சட்ட பேரவையின் சபாநாயகர் எல்.ஏ.அப்பாவுவையிடம் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இலங்கைக்கு தமிழக அரசாங்கம் வழங்கி வரும் உதவித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கொமன்வெல்த் அமைப்பின் 65ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான காமினி லொகுகே, சி.பி.ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோகினி கவிரத்ன, இரா.சாணக்கியன் மற்றும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

