அரசை பாதுகாக்கும் சட்ட மூலம்: சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மனு தக்கல்
அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஊடகவியலாளர்களான எம்.எப்.எம்.பஸீர் மற்றும் தரிந்து உடுவரகெதர சார்பாக சட்டத்தரணி தர்மராஜாவால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலமானது அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு, அரசியலமைப்பின் 120 மற்றும் 121 பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
மீறப்படும் உரிமை
மனுதாரர்கள், தனிப்பட்ட உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், இலங்கை மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பையும் மதித்தல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொது நலனுக்காகவும் இம்மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

18.09.2026 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட இந்த சட்ட மூலம் , ஒக்டோபர் 06ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த சட்ட மூலம் 06.10.2026 நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்காக முன்வைக்கப்பட்டது.
தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களின் கீழ் வரும் ஒரே மாதிரியான அல்லது ஒத்த செயல்களுக்கு சட்ட மூலம் ஒரு தனி சட்ட நடைமுறையை உருவாக்குவதாகவும் இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமை மீறப்படுவதாகவும் இந்த மனு ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மனு சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணிகளான சிபான் மஹ்ஷரூப், சாலினி பெர்ணான்டோ, நெஹன்சா வீரசிங்க, ஹோசதி ஹப்பு ஆரச்சி, அழகரத்னம் ஜினோசன், ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.