மக்கள் வாழமுடியாத நாடாக இலங்கை - ரோஹண லக்ஷ்மன் பியதாஸ சுட்டிக்காட்டு
இலங்கை, மக்கள் வாழமுடியாத நாடாக மாற்றம் பெற்று வருவதாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தெரிவிக்கின்றது.
நாட்டையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்புச் செய்வதாக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று நாட்டைக்கூறுபோட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருப்பதாக கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
கடந்த பொதுத் தேர்தலில் கொள்கை ரீதியாக எமது கட்சி தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகவே முன்நின்று செயற்பட்டதோடு, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களை மீளக்கைப்பற்றுவதாகவும் அறிவித்திருந்தது.
துரதிஸ்டவசமாக இன்று எதனை விற்பனை செய்யலாம் என அரசாங்கம் வகை தேடுகிறது. வயல்நிலயங்கள், பெறுமதியான காணிகள், தொழிற்சாலைகள் என அனைத்தையும் அரசாங்கம் விற்பனை செய்து வருவதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
சொத்துக்களை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சொத்துக்களை விற்பனை செய்கிறது. கொழும்பு துறைமுகத்தைச் சேர்ந்த பகுதிகளும் இன்று விற்பனை செய்யப்படவுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதேபோல இன்று தொழிற்துறையில் நிபுணர்கள் பலரும் அரசாங்கத்தின் குழுக்களிலிருந்து விலகி வருகின்றனர். பல இளைஞர்கள்கூட நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
வாழ முடியாத நாடாக இலங்கை மாறிவருகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக கொள்கை ரீதியிலான மாற்றம் அவசியப்படுகின்றது எனக் கூறினார்.