சட்டப்போராட்டத்தில் படு ‘பிஸி’யாகிவிட்டுள்ள தமிழரசுக் கட்சி!
சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகச் சட்டப்போராட்டங்களை நடாத்துவதாகக்கூறி சட்டவல்லுனர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவந்த தமிழரசுக் கட்சி, கட்சிக்குள்ளேயே சட்டப்போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலைக்குத் தற்பொழுது தள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் அக்கட்சியின் பொதுக்குழுவினரின் பெரும்பாண்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டது யாவரும் அறிந்ததே.
சட்டச் சிங்கம்.. பேச்சுப் புலி.. அறிக்கை மன்னன்.. முறுகிகொண்டு வெளியேசென்ற காட்சியையும் ஊடகங்களில் கண்ணாரக் கண்டிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவின் போது பலத்த இழுபறிகள் நடைபெற்றதும், கைகலப்புவரை அந்தத் தெரிவு விவகாரம் சென்றிருந்துடன், "நீதிமன்றம் செல்லுவேன்.." என்று சுமந்திரன் சிறீதரனை மிட்டிய சம்பவம் எல்லாம் அந்தத் தெரிவின்போது நடைபெற்றதாகவும் கட்சிக்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.
கட்சிக்கூட்டத்தில் நடந்த அசிங்கங்களைப் பார்த்து ஊரே கைகொட்டிச் சிரித்தபோதும், ‘அதுதான் உண்மையான ஜனநாயகம்’ என்று வழமைபோலவே யாருக்கும் புரியாத ஒரு தத்துவத்தை தங்களுக்குத் தாங்களே கூறி இன்பம் கண்டிருந்தார்கள் கட்சிப் பிரமுகர்கள்.
அதனைத் தொடர்ந்து 'சிறீதரன் கட்சித் தலைவராகச் தெரிவுசெய்தது செல்லாது' என்று ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்கான முயற்சியை சிறிதரனுக்கு எதிரான அணியினர் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
யாழில் உள்ள ஒரு பிரபல இளம் வழக்கறிஞரை அணுகிய அந்த அணியினர், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றார்கள்.
அதேபோன்று, 'இரண்டுகைகளையும் தூக்கி வாக்களித்து செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட குகதாசனின் தெரிவு சட்டவிரோதமானது' என்று கூறி சட்டநடவடிக்கை எடுக்கும் முயற்சியில் தீவகத்தைச் சேர்ந்த சிலரும், மட்டக்களப்பைச் சேர்ந்த சிலரும் இறங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கட்சிக் கூட்டத்தின் போது 'குடுத்த காசுக்கு மேலாக கூவி', சக உறுப்பினர்கள் மீது தாக்குதல்நடாத்திய சில அல்லக்கைகளுக்கு எதிராக திருகோணமலை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டு, அந்த விடயமும் சட்ட நடவடிக்கையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.
அதேவேளை, சிறிதரனும் கொழும்புக்குச் சென்று பிரபல அதிபர் சட்டத்தணியான தவராஜாவைச் சந்தித்து கட்சி தொடர்பான சட்ட விபரங்களை கலந்துரையாடியதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
நல்ல விசயந்தான்... நடக்கட்டும்...
ஆனால் தங்களது பதவி என்று வந்ததும் ‘வழக்கு..’, ‘சட்டநடவடிக்கை..’ என்று குத்திமுறிகின்ற எவருமே ஏன் இதுவரை சர்வதேச சட்டங்கள்.. இலங்கையிலுள்ள சட்டங்களின் மூலம் தமிழருக்கான நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு கல்லைத்தானும் தூக்கிப்போடவில்லை என்று ‘சோமன்னை’ கேட்கிற கேள்விக்கு அவர்கள்தான் பதில்கூறவேண்டும்.