சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் விமல் - ரணிலுக்கு கடிதம்
விமல் - ரணிலுக்கு கடிதம்
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான பொதுவான வேலைத்திட்டம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மார்க்க வரைபடத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டுமென அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண உடனடியாக அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்ட வேண்டுமென விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
போலிப் போராளிகள் அல்லது ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களின் அரசியல் ஆயுதத்தை அழித்தொழிப்பது முக்கியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியம்
அறிவு, மூலோபாய அணுகுமுறை மற்றும் அதற்கேற்ப தயாரிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் சர்வகட்சி மாநாட்டின் மூலம் நாட்டுக்கு பொதுவான ஒருமித்த கருத்தை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை பெறுவது முக்கியம் என விமல் வீரவன்ச அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றக் குழுக்களை நியமிப்பது அனைத்துக் கட்சிகளின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் ஒரு பகுதியே தவிர, துணை செயல்முறை அல்ல எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
