சிம் அட்டைகள் இல்லை -சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பாரிய நெருக்கடி
அச்சிடுவதற்கு தேவையான சிம் கார்டுகளுடன் கூடிய வெற்று அட்டைகள் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோட்டார் வாகனத் திணைக்களத்தில் தற்போது 3,000 மதிப்புள்ள சிம் கார்டுகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. இந்நிலையால் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர ஓட்டுனர் உரிமம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், திணைக்களத்தின் வருமானமும் குறைந்துள்ளது. இந்நிலைமையால் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இரண்டு அச்சகங்களும், அனுராதபுரத்தில் உள்ள ஒரு அச்சகமும், ஹம்பாந்தோட்டையில் உள்ள ஒரு அச்சகமும் மாதாந்தம் சுமார் நான்கு இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிப்பதாகவும் அது மிகக் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோனிடம் சிங்கள ஊடகமொன்று வினவியபோது, தற்போதைய சூழ்நிலையில் வெற்று அட்டைகளை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள போதிலும் எவ்வித பிரச்சினையும் இன்றி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட அட்டைகள் சிக்கனமாகப் பயன்படுத்தப்படும் எனவும் அத்தியாவசிய விடயங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும், தேவையான அட்டைகள் வழங்கப்படும் வரை தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் சுமித் அழககோன் மேலும் தெரிவித்தார்.
