கொழும்பு நீதிமன்றத்தில் பாதுகாக்கப்பட்ட மதுபானம் மோசடிக்குள்!
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற களஞ்சியசாலையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்களில் மாற்றுத் திரவம் நிரப்பப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் பம்பலப்பிட்டி இரவு விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்கள் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
வழக்கின் நிறைவில் அவற்றை அழிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நடத்தப்பட்ட சோதனை
சம்பந்தப்பட்ட மதுபான இருப்பை நீதவான் முன்னிலையில் அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போது நடத்தப்பட்ட சோதனையில் பல போத்தல்களில் மதுபானத்திற்குப் பதிலாக ஒரு மாற்றுப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதனையடுத்து அவற்றை அழிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டதோடு, நீதிமன்ற களஞ்சிய அறையில் மதுபான போத்தல்கள் சேமித்து வைக்கப்பட்டு இது குறித்து வாழைத்தோட்ட காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பின்னர் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தொடர்புடைய மதுபான போத்தல்களை மேலதிக விசாரணைக்காக இரசாயன பகுப்பாய்வாருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் தனுஜா லக்மாலி, மதுபானத்திற்கு பதிலாக மாற்றுப் பொருள் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
