தம்பலகாமத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் நிலமின்றி பெரும் அவதி!
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது மாடுகளை வளர்ப்பதற்குப் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக, தம்பலகாமம் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்களின் தேவைக்காக மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில், கடவானை பகுதியில் மேய்ச்சலுக்குப் பொருத்தமான நிலப்பகுதி காணப்படுகின்றது.
இருந்தபோதிலும், குறித்த பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை கால்நடை வளர்ப்பாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வதில் சிரமம்
இதன் காரணமாக தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வதில் வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

போதிய மேய்ச்சல் வசதிகள் இல்லாததால் மாடுகளுக்கான உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், கால்நடை வளர்ப்புத் தொழிலைத் தொடர்வதிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேய்ச்சல் நிலத்தைத் தேடி மொரவெவ பகுதிக்கு கால்நடைகளை அழைத்து சென்ற போதிலும் அம்மக்களால் திருப்பி அனுப்பப்பட்டதாக கால் நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தம்பலாகாமம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கால்நடைகளை அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல குடும்பங்கள் இத்தொழிலை நம்பியே தமது அன்றாட பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில், மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமை அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கடவானை பகுதியில் உள்ள மேய்ச்சலுக்குப் பொருத்தமான நிலத்தை கால்நடை வளர்ப்பாளர்கள் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள், பிரதேச நிர்வாகம் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், தம்பலகாமம் பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கி, கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |