பேரினவாத கட்சிகளை தோற்கடிப்போம்! நிலாந்தன் அறைகூவல்
சுமார் 75 ஆண்டுகளாக போராடிவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, உரிமைகளை தர மறுக்கும் பேரினவாத கட்சிகள் வாக்குகளுக்காக இன்று வீட்டு திண்ணையில் வந்து நின்று கதவுகளை தட்டுகின்றனர் அவர்களை மட்டக்களப்பு தமிழர்கள் தோற்கடித்து தன்மானத் தமிழர்கள் என்பதை நிடூபித்துக் காட்ட வேண்டும் என மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஆறாம் வட்டார வேட்பாளர் செ.நிலாந்தன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்
தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்
தமிழரசுக் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தமிழரசுக் கட்சி இந்த ஐயன்கேணி மண்ணுக்கு என்ன செய்துள்ளது என்று சிலர் கேட்கின்றனர்.
இலங்கையில் சுமார் 75 ஆண்டுகளாக வரலாற்றைக் கொண்ட தன்மானம் மிக்க தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய மிக்க தமிழரசுக் கட்சி இந்த கிராமத்திற்கு மாத்திரம் அல்ல வடகிழக்கு தமிழர் தாயகத்திற்காக பல உயிர் தியாகங்களை செய்திருக்கிறது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய கட்சி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு துணை நின்ற கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவை பலி கொடுத்திருக்கின்றோம். நிமலன் சவுந்தரநாயகம் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம். சந்திரநேரு ஐயாவை பலி கொடுத்திருக்கின்றோம், கொழும்பில் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களை பலி கொடுத்திருக்கின்றோம் இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பல உயிர் தியாகங்களை செய்த கட்சி என்றால் அது தமிழரசுக் கட்சி மாத்திரமே.
வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக முப்பது ஆண்டுகள் யுத்தம் செய்தனர், அகிம்சை வழியில் அரசியல் வழியில் போராடினர். அந்த நேரத்தில் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாத அரசுகள் கூட தமிழ் மக்களின் போராட்டத்தை ஏற்று பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
அரசியல் அதிகாரத்தை தர மறுக்கும் அநுர அரசு
ஆனால் இன்று இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமைப் பிரச்சினையும் இல்லை என்ற கூறிக்கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, அரசியல் அதிகாரத்தை தர மறுக்கின்றனர்.
பல ஆயிரக்கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம், இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் தொல்பொருள் திணைக்களம், வன இலாக திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்படுகிறது, மட்டக்களப்பு எல்லைக் கிராமமான மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் கிராமங்களை பாதுகாக்க முடியவில்லை இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த முகத்தைக் கொண்டு தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
சிங்கள மக்களுக்கான ஆட்சி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாத்திரம் அல்ல தென்னிலங்கையில் உள்ள பல பேரினவாத கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக இங்குள்ள சில தமிழர்களை ஏமாற்றி கையூட்டுக்களை கொடுத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை , தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை தருவதில்லை அவர்கள் தொடர்ந்து சிங்கள மக்களுக்கான ஆட்சியையே நடாத்தி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதைத்தான் செய்கிறது.
தமிழ் மக்கள் தங்களது இருப்பைப் பாதுகாக்க எவ்வளவோ தியாகங்களை செய்திருக்கின்றனர். அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அரசு இன்று வந்து எமது வீட்டு திண்ணையை தட்டுகின்றனர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு.
நாம் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரம் அல்ல ஏனை மாற்றுக் கட்சிகளுக்கும் வாக்களிப்போமாக இருந்தால் நாம் எமது அடையாளத்தை, நாம் தமிழர்கள் என்ற பூர்வீகத்தை எமது வரலாற்றை இழப்போம் என்பதோடு எமது இருப்பை பாதுகாப்பதற்கும் இருப்பதையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இன்றுவரை போராடிவரும் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
