ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கு 100 கோடி ரூபாய் செலவு..!
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்ப நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 100 கோடி ரூபாய் நிதியை செலவிட்டுள்ளதாக நிதி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவையாக 9 பில்லியன் மற்றும் அச்சிடும் செலவு மட்டும் .1.827 பில்லியன் ரூபாயாக காணப்பட்ட நிலையில், அதில் 1 பில்லியன் (100 கோடி) ரூபாய் ஏற்கெனவே செலவிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கு வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சட்டமூலம்
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டால் மாத்திரமே வைப்புத் தொகையை மீளப் பெற முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் வர்த்தமானி அறிவித்தல் மூலமாகவே வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.