உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்.... வெளியான அறிவிப்பு
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.
பாணந்துறை (Panadura) பகுதியில் நேற்று (11) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”உள்ளூராட்சி தேர்தலுக்காக முன்னதாக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சட்ட மூலத்தை நிறைவேற்றுதல்
குறித்த சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குப் போதியளவு கால அவகாசம் உள்ளது. எனவே, அதனை நிறைவேற்றி மூன்று மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தக்கூடிய சட்டரீதியான இயலுமைகள் கிடைக்கப் பெறும்.
அதற்கமைய, மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும்.
அத்துடன், இந்த தேர்தலுடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து அனைத்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையில் எதிர்வரும் 17 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |