மக்களே அவதானம் - நாளை மாறும் வானிலை: வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12-10-2026) காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்ளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இடியுடன் கூடிய மழை
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண நிலையில் காணப்படும்.
இருப்பினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர்) வீசுவதுடன் அந்தக் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பலத்த மின்னல் தாக்கம்
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாகத் தெரிவித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (12) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தலானது நாளை (13) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |