மகிந்த கஹந்தகமவிற்கு விளக்கமறியல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த இவரை, இன்றைய தினம் (12) வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
மஹிந்த கஹந்தகம ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்படும் மகிந்த கஹந்தகம
'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகி ந்த கஹந்தகம, நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி விசாரணைகளுக்கு அமைவாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மிரிகான பகுதியில் கைது
குறித்த சந்தேக நபர் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் கடந்த 05ஆம் திகதி இரவு மிரிகான பகுதியில் உள்ள உணவகத்திற்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் மேலும் இருவர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |