ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரும் ஒன்லைன் கையெழுத்து வேட்டையில் சிக்கிய போலி தரவுகள்...
தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி இணையத்தளத்தில் கையெழுத்து திட்டம் ஒன்று செயற்பட்டு வருவதாக இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
எனினும், இந்த ''ஒன்லைன் கையெழுத்து'' வேட்டையில் தொழில்நுட்ப சர்ச்சைகளும் ஏமாற்று வேலைகளும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் ஞானசார தேரரின் விடுதலைக்காக 50 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களிடம் இருந்து கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சமூக வலைத்தள பிரசாரம்
இதை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் சில தரப்பினரால் தீவிரப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும், இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில் பொதுமக்கள் யாரும் உண்மையாக பெருமளவில் கையெழுத்திடவில்லை என்பதும், கணினி நிரலாக்கம் மூலம் செயற்கையாக கையெழுத்துக்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதும் தொழில்நுட்ப ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்தின் தரவுத்தளத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிசோதித்த போது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகத் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகளால், இணையம் அல்லது கணினிகளே இல்லாத 1900 ஆம் ஆண்டிலேயே மக்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டதாக இணையத்தளத் தரவுகளில் பதிவாகியுள்ளது.
அந்த போலி திட்டத்தில் மூலம் ஆயிரக்கணக்கான கற்பனையான பெயர்கள், போலி முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களைத் தானாகவே தரவுத்தளத்தில் நிரப்பியுள்ளனர்.
அப்படித் தரவுகளை கணினி மூலமாகத் தானாக நிரப்பும்போது, கையெழுத்திட்ட திகதியை குறிக்கும் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது நிரலாக்கத் தவற்றின் காரணமாக, அது 1900 ஆம் ஆண்டு என்று தவறாகப் பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
600-க்கும் குறைவான கையெழுத்துக்கள்
இந்த இணையத்தளத்தின் முகப்பில் சுமார் 60,000 கையெழுத்துக்கள் இருப்பதாகக் காட்டப்பட்ட போதிலும், அதன் பின்னணித் தரவுகளை முழுமையாகச் சரிபார்த்த போது அதில் 600-க்கும் குறைவான கையெழுத்துக்கள் மட்டுமே உண்மையானவை என்பது உறுதியாகியுள்ளது.

எஞ்சிய பல்லாயிரக்கணக்கான கையெழுத்துக்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தும் தானியங்கி மற்றும் Cloud Code மூலம் போலியாக உருவாக்கப்பட்டு, தரவுத்தளத்தில் முறைகேடாக நிரப்பப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் விடுதலைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாகக் காட்டும் நோக்கில், திட்டமிட்ட அடிப்படையில் இந்தத் தொழில்நுட்ப ஏமாற்று வேலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகத் தற்பொழுது பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |