நெடுமாறனின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் - மனிந்தர்ஜீட் சிங்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணிக்கவில்லை என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து தொடர்பில் தமிழக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் மனிந்தர்ஜீட் சிங் பிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு - திருமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பழ நெடுமாறனின் கருத்து
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தியின் கொலைக்கு காரணமான, தீவிரவாத கொள்கை கொண்டவர்களுடன் அரசியல் செய்வது தவறான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் வசிக்கின்றார் என்ற பழ நெடுமாறனின் கருத்தை மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் , தமிழக அரசாங்கம் தனது நிலைபாட்டினை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் எனவும் மனிந்தர்ஜீட் சிங் பிட்டா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்தமையானது தவறான விடயம் என்பதோடு, விடுதலை பெற்றாலும் அவர்களின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்திய மத்திய அரசாங்கம் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருவதோடு, பிரதமர் நரேந்திர மோடியும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
