மாவீரர் தினத்திற்கான தயார் நிலையில் தாயகம்! குழப்பம் விளைவிக்கும் செயற்பாட்டில் தென்னிலங்கை நிறுவனம்
மாவீரர் வார நினைவேந்தலில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகே தென்னிலங்கை நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் விளம்பர நிகழ்வு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் தற்போது அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மண்டபமொன்று திறந்து வைக்கப்பட்டதுடன்பலரும் நாளாந்தம் அதனைப் பார்வையிட்டு வருகின்றனர்.
சிங்கள பாடல்கள்
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகே தென்னிலங்கையைச் சேர்ந்த டிபி எடியுகே சன் (DP EDUCATION) என்ற தனியார் அறக்கட்டளை நிறுவனத்தின் விளம்பர வாகனமொன்று வந்ததுடன் அங்கு பாடல்களை சத்தமாக ஒலிக்கவிட்டு நிறுவனம் தொடர்பான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற சிலர் நினைவேந்தல் நடைபெறுவதாகவும் பாடலை சத்தமாக ஒலிபரப்ப வேண்டாம் எனவும் கூற பாடல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சிறிது நேரத்தில் அங்கு வந்திருந்த பெரும்பான்மை சிங்கள இனத்தவர்கள் அங்கு மிகவும் சத்தமாக சிங்கள பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விசனம்
கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறிய DP EDUCATION என்ற தனியார் அறக்கட்டளை நிறுவனம், மாவீரர் வாரம் தற்போது அனுஷ்டிக்கப்படு வருகிற நிலையில் அதனை குழப்பும் விதத்தில் செயற்பட்டதாக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்தனர்.
எதிர்ப்பு வலுக்கவே அந்த நிறுவனத்தினர் வாகனத்தை அங்கிருந்து நகர்த்தி சென்றுள்ளனர்.
நவம்பர் 24 முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றை மேற்கொள்ளவே இந்தக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர் என அறியமுடிகிறது.