பெரும் நெருக்கடியில் மக்கள் - எம்.பிக்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள்
ஒருவேளை உணவிற்கே அல்லாடும் மக்கள்
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாளாந்தம் அதிகரித்து செல்லும் விலையேற்றத்தினால் ஒருவேளை உணவிற்கே மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் தனது வழமையான செயற்பாடுகளை மக்களை பற்றி சிந்திக்காமல் எவ்வித தயக்கமும் இன்றி முன்னெடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் நேற்றையதினம் 37 பேர் இராஜாங்க அமைச்சரக்ளாக நியமனம்.இன்றையதினம் 18 எம்.பிக்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக நியமனம்.
எம்.பிக்களின் மருத்துவக் காப்புறுதி
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதியை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எம்.பி.க்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை தற்போது ஆண்டுக்கு இரண்டு இலட்சம் ரூபாய். அதனை பத்து இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் எடுத்த முடிவு
எனினும், நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக குறித்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதை மேலும் சில மாதங்களுக்கு தாமதப்படுத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
சாரதிகளுக்கு சம்பள அதிகரிப்பு
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நாடாளுமன்றத்தின் சபை குழு தனது பூரண இணக்கத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த முன்மொழிவை பொது நிர்வாக அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
சாரதிகளுக்கான தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.35,000. இந்த சம்பளம் போதாது என தெரிவித்து மேலும் பத்தாயிரம் ரூபாவால் சம்பளத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

