காவல்துறையினரால் மாவீரர் தினத்திற்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களின் தீர்மானம்!
மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களாலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்றையதினம்(2) நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை பருத்தித்துறை,நெல்லியடி காவல்துறையினர் மாவீரர் தினத்திற்கு தடை கோரி தாக்கல் செய்த மனு பருத்தித்துறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
அத்துடன், ஊர்காவற்துறை நீதிமன்றில் மாவீரர் தினத்திற்கு எதிரான ஊர்காவற்துறை காவல்துறையினரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
காவல்துறையினரின் செயற்பாடுகள்
மேலும், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

எழுச்சியாக இம்முறை மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு துயிலுமில்லங்கள் தயாரான நிலையில் இறுதி நேரத்தில் தடை விதிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியபோதும் நீதிமன்றங்களால் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை கடந்த வாரம் மானிப்பாய், பலாலி, அச்சுவேலி, தெல்லிப்பழை காவல்துறையினரால், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் சாட்டி துயிலுமில்லம், கொடிகாமம் துயிலுமில்லம், எள்ளாங்குளம் துயிலுமில்லம், கோப்பாய் துயிலுமில்லம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக உள்ள மாவீரர் மண்டபம் என பல இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு ஏற்பாடாகியுள்ளது.
ஈகச் சுடரேற்றல்
மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வுகளில் சரியாக மாலை 6.02 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு மாலை 6.05 மணிக்கு ஈகச் சுடரேற்றல் இடம்பெறும்.

இதன்போது மாவீரர் நாள் பாடல்களும் ஒலிக்கவிடப்படும் என்று மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகளைப் பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்