ஆலங்குளம் மற்றும் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்!
ஈழத்தமிழருக்காய் தம் இன்னுயிரை ஈகையாக்கிய வெற்றி வீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தும் பொன்னான மாவீரர் நினைவு நாள் நேற்றைய தினம் (27) தமிழர் தாயகம் தாண்டி தமிழர் புலம்பெயர் தேசத்திலும் எம்மவருக்காய் இடம்பெற்றது.
அந்த வகையில் தமிழர் தாயகத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவு தினம் நேற்று உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.
அஞ்சலி செலுத்தினர்
இங்கு நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச்சுடரினை மாவீரன் டடி அவர்களின் சகோதரி மற்றும் நான்கு மாவீரரின் தாயார் ஒருவரும் இணைந்து ஏற்றி வைக்க, அவர்களைத் தொடர்ந்து ஏனைய வீரமறவர்களை அவர்களது உறவுகள் சுடரேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அதே போன்று மல்லாவியிலுள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மண்ணுக்காய் இன்னுயிரைத் தியாகம் செய்த எம்மின வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
பொதுச்சுடரினை ஏற்றி வைக்க
நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாக பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயான சண்முகசேகரம்பிள்ளை கிருஸ்னாம்பாள் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஆண்டாண்டு காலம் அழுதாலும் ஆற்றவொண்ணா துயராய் நம் இந மீட்சிக்காய் இறுதி மூச்சு வரை போராடிய நம் வீர வணக்கத்துக்குரிய மாவீர்களுக்கான நினைவேந்தல் பல தடைகளை தாண்டியும் சிறப்பாக பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |