கொட்டும் மழைக்கு மத்தியில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
. மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் காவல்துறை பிரிவுட்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை(27.11.2023) மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர்.
குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ காவல்துறையினர் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் காவல்துறையினர் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
எனினும் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடவோ, கார்த்திகை பூ சின்னங்கள் காட்சிப்படுத்தவோ அங்கு காவல்துறையினர் அனுமதியளித்திருக்கவில்லை.
தடை உத்தரவு
மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள கற்பாறையில் ஏற்கனவே கார்த்திகை பூ ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதனையும் அகற்றுமாறும் காவல்துறையினர் கோரினர்.ஆனாலும் அதனை ஏற்பாட்டாளர்கள் கருத்திற் கொள்ளவில்லை.
குறித்த மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளாத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு காவல்துறையினர் நீதிமன்றத்தினூடாக ஞாயிற்றுக்கிழமை தடை உத்தரைவைப் பிறப்பித்திருந்தனர்.
மாவீரர்களுக்கு அஞ்சலி
ஆனாலும் திங்கட்கிழமை நீதிமன்றிற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களது சட்டத்தரணிகளுடாக தமக்கு வழங்கப்பட்ட தடையுத்தரவை விலக்கக் கோரி முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கு இந்நிகழ்வில் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டும் வகையிலான எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது கலந்து கொள்வதற்கு அனுமதியளித்திருந்தது.
அதற்கிணங்கள் இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், மற்றும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மாவீரர் ஒருவரின் தாய் பொதுச் சுடரை ஏற்றிவைக்க ஏனைய சுடர்களை கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர்மல்க கொட்டும் மழைக்கு மத்தியில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.