உலகத் தமிழர் வரலாற்று வளாக துயிலும் இல்லத்தில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள்
தாயகம் உட்பட உலக நாடெங்கும் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு மாவீரர் நாள் எப்போதும் போன்று உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் நிறுவப்பட்டு உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் நடைபெற்றது.
15.11.2026 அன்று வளாகத்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வின் போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்களினால் தொட்டு ஆசீர்வதிக்கப்பட்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட தேசிய கொடி "தமிழீழ தேசியக்கொடி நாள்" அன்று பிரித்தானியா பல இடங்களில் ஏற்றப்பட்டு, அதே தேசியக்கொடி மாவீரர் நாள் ஆகிய 27.11.2026 அன்று உலகத் தமிழர் வரலாற்று வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டு பண்ணிசை அணிவகுப்பு மரியாதையுடன் கொடிக்கம்பத்தை நோக்கி கொண்டுவரப்பட்டது.
பொதுச்சுடர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களிடமிருந்து உலகத் தமிழர் வரலாற்றுவளாக நிர்வாகம் தேசியக் கொடியினை பொறுப்பேற்றது.

தொடர்ந்து பொதுச் சுடர்களை சதீஷ் சர்மா பிரதான குருக்கள் அற்புத விநாயகர் ஆலயம், அருட்தந்தை துஷ்யந்தன் உதவி ஆன்மீக இயக்குனர் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் பிரித்தானியா, மாவீரர் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் அன்பு மகளும், மாவீரர் வீரவேங்கை எழில்மதி அவர்களின் அன்பு சகோதரியுமான முகிலினி, மாவீரர் மேஜர் தாரகை அவர்களின் அன்புச் சகோதரி சுமங்கலி, நீண்ட கால தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் முத்துலிங்கம் பிரபா ஆகியோர் ஏற்றினர்.
பிரித்தானிய தேசியக்கொடியினை முன்னாள் Crawley நகரசபை மேயர் சர்மிளா சிவராஜா ஏற்ற, தமிழரின் ஒரே அடையாளமாக இருக்கும் தமிழீழ தேசியக்கொடியினை உலகத் தமிழர் வரலாற்றுவளாகத்தின் முன்னாள் பணிப்பாளரும் 2026 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவின் இணைப்பாளருமானஇனியவன் (வசந்தன்) அவர்களினால் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு, தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் அறிக்கை காணொளி வடிவில் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
ஈகைச் சுடர்
துயிலும் இல்ல மணியோசை எழுப்பப்பட்டு, அக வணக்கம் செலுத்தப்பட்டதனை தொடர்ந்து துயிலும் இல்ல பாடல் ஒலிக்க, முதன்மை சுடரினை உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் அறங்காவலர் அவையின் இணைப்பாளரும், வளாகத் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரும், நீண்ட கால தமிழீழ தேசிய செயற்பாட்டாளருமாகிய நல்லைநாதன் சுகந்தகுமார் ஏற்ற, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு ஜெகன் ,பொது மாவீரருடைய திருவுருவப்படத்திற்கு .பாலா மாஸ்டர் ஏற்ற, சமநேரத்தில் துயிலுமில்ல பகுதியில் நிலைப்படுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களுடைய திருவுருவப்படங்கள் தாங்கிய நடுக்கற்களுக்கு, மாவீரர்களுடைய பெற்றோர்கள், உறவுகள், உரித்துடையோர் மற்றும் எம் தேச மக்களென அனைவரும் ஈகைச் சுடர் ஏற்றினார்.

அதே வேளை திருவுருவப்பட கொட்டகையில் நிலைப்படுத்தப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மாவீர தெய்வங்களின் திருவுருவப்படத்திற்கு அப்பகுதியில் செயற்பாட்டில் நின்ற, தேசப்பற்றார்கள் ஈகைச் சுடரேற்றினர்.
கார்த்திகை பூச்சூடி, ஈகைச்சுடர் ஏற்றி கண்ணீர் மழையில் மாவீரர் தெய்வங்களுக்கான தமது மனம் நிறைந்த வழிபாட்டினை உறவுகள் செய்திருந்தார்கள். துயிலும் இல்ல பாடல் நிறைவினைத் தொடர்ந்து, தேசிய தலைவரின் திருவுருவப் படத்திற்கும், பொது மாவீரருடைய திருவுருவப்படத்திற்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள், கடும் குளிரினையும் பொருட்படுத்தாது, நீண்ட வரிசையில் நின்று வணக்கம் செய்தனர்.
அரங்க நிகழ்வுகள்
தொடர்ந்து மண்டபம் நிறைந்த மக்களுடன் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றது. நடனங்கள், பாடல்கள், கவிதைகள், உரைகள் என கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

சிறப்புரையினை இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் ஆற்றினர். தோழமை ரீதியான நன்றி அறிதலுடன், உறுதி ஏற்புடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது. தொடர்ந்தும் உறவுகளின் வருகை இருந்தமையினால் இரவு 8.00 மணிக்கு தேசிய கொடி கையேற்கப்பட்டு 2026 ஆண்டுக்கான மாவீரர் நாள் நிறைவடைந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
