வெடிக்கத் தயாரான நிலையில் மெகசின் சிறைச்சாலை : சாமர சம்பத் எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை "வெடிக்கத் தயாராக" இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) தெரிவித்துள்ளார்.
இதனால் இரவு நேரங்களில் சுமார் 500 கைதிகள் நிற்கின்ற நிலையிலேயே உறங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை முன்வைத்தார்.
அதிகபடியான நெரிசல்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாட்டின் சிறைச்சாலைகளின் உத்தியோகபூர்வ கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், தற்போது சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகபடியான நெரிசல் நிலைமை காரணமாக, சிறைச்சாலைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை "வெடிக்கத் தயாராக" இருக்கின்றது. இரவு நேரங்களில் சுமார் 500 கைதிகள் நிற்கின்ற நிலையிலேயே உறங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கைதிகளுக்குப் போதுமான கழிப்பறைகள் வசதிகள் இல்லை, இந்த நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் சிறைச்சாலைகளில் பாரிய குழப்பங்கள் வெடிக்கக்கூடும்.
சிறைச்சாலைக் காவலர்கள்
அண்மையில் ஒரு கைதி CRP சிறைக்கூடத்தின் பெரிய மதிலைத் தாண்டித் தப்பிச் சென்றார், இந்தச் சம்பவத்தின்போது இருவர் காயமடைந்தனர், தப்பிச் சென்ற கைதியை இன்றுவரைப் பிடிக்க முடியவில்லை.

அதேநேரம், சிறைச்சாலைகளில் 10,750 கைதிகளுக்குப் போதுமான அதிகாரிகளே உள்ள நிலையில், அவர்களால் 37,000க்கும் மேற்பட்ட கைதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
சிறைச்சாலைக் காவலர்கள் 24 மணி நேரம் வேலை செய்யும் கட்டாயத்தில் உள்ளதால் இது அவர்களின் செயல்திறனையும் உளவியலையும் கடுமையாகப் பாதிக்கின்றது.
இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண, மேலும் பல சிறைக் கட்டடங்கள் மற்றும் சிறைக்கூடங்களை கட்டியெழுப்ப உடனடியாகத் விலைமனுக்கள் கோரப்பட வேண்டும், இதன் மூலம் நெரிசலைக் குறைக்க வேண்டும்” என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்