இந்தியப் பிரதமருக்கு மகஜர் அனுப்பிய வடகிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கக் கோரி வடகிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மகஜர் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதுவரகத்தில் நேற்றைய தினம் (17) கையளித்தனர்.
மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13 ஆவது திருத்தம்

''13ஆவது திருத்த சட்டம் குறித்து அதனால் வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல் படுத்துமாறு, சிவில் சமூக பிரதிநிதிகளாக யாழ் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம். அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
முடிந்த வரையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்தக் கடிதத்தினை அனுப்பி இருக்கின்றோம்.
36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக இணைந்த வடகிழக்கில் அமைந்த மாகாணசபையில் ஒன்றரை வருடங்கள் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றினர். பிரிந்த வடக்கு மாகாணத்தில் ஐந்து வருடம் மாத்திரம் செயற்பாட்டில் இருந்தது.
அந்தக் காலத்திலும் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை. அதிகாரங்களில் சில தடைகள் இருந்தாலும் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்ற கவலை நமக்குள்ளது'' என்றார்