ஞானசார தேரருக்கு துறவற ஆடை : சிறைச்சாலை ஆணையாளருக்கு பறந்த கோரிக்கை
சியாம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபையின் தலைமை நாயக்க தேரரான, இட்டபான தம்மாலங்கார தேரர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் தனது துறவற உடைகளை அணிந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தச் செயல்முறை பௌத்த கோட்பாடுகள் மற்றும் துறவற ஒழுக்க விதிகளுக்கு (தம்ம-வினய) அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மதச்சடங்குகளை மேற்கொள்வதற்கான காலம்
இதற்கமைய, இதற்கான மதச் சடங்குகளை மேற்கொள்வதற்கு விரைவில் ஒரு திகதியையும் நேரத்தையும் ஒதுக்கித் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தாமும் உள்ளடங்கிய சங்க சபையின் பத்து பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, இந்த நோக்கத்திற்காகச் சிறைச்சாலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக மகாநாயக்க தேரர் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை
இந்தக் குழுவின் வருகைக்கான தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும், அது குறித்து தமக்கு அறிவிக்குமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் அவர் கோரியுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |