வாயில்லா ஜீவன்கள் மீது அரங்கேறிய கொடூரம்! அயலவர்கள் முறைப்பாடு - ஒருவர் கைது
மஹரகமவில் வீடொன்றின் முன்பாகவிருந்த கட்டாக்காலி நாய்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் மேற்படி பகுதியில் நடமாடும் குறித்த சந்தேக நபர், வீதியில் நின்ற நாய்கள் மீது முதலில் கல்லெறிந்து துரத்தியுள்ளார்.
பின்னர் இரவு நேரத்தில் வருகை தந்து உறங்கிக்கொண்டிருந்த நாய்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
வீடுகளின் உரிமையாளர்கள்
இந்தத் தாக்குதலில் அங்கிருந்த வெள்ளை நிற நாய் ஒன்று பலத்த காயமடைந்துள்ளது.
இதையடுத்து மறுநாள் காலையிலும் குறித்த நபர் தடியுடன் வந்து விலங்குகளைத் துரத்தித் தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பகுதியில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள் அவரைத் தடுத்துக் கண்டித்த போதிலும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு அன்றைய தினமே மதியம் 12 மணியளவில் வீதியோரம் உறங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது அவர் திட்டமிட்டு உந்துருளியால் மோதியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அவ்வீடுகளின் உரிமையாளர்கள் மஹரகம காவல் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுக்கு சென்று முறைப்பாடு அளிக்க முயன்றபோது அங்கிருந்த நிலையப் பொறுப்பதிகாரி (OIC) முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளார்.
கட்டாக்காலி நாய்கள்
இவை கட்டாக்காலி நாய்கள் என்பதால் இவற்றின் பொறுப்பை நீங்களே ஏற்க வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அவ்வுரிமையாளர்கள், இவை வாயில்லாப் பிராணிகள், இவற்றால் பேச முடியாது என்பதால்தான் நாங்கள் நீதி கேட்டு வந்துள்ளோம் என வாதிட்டுள்ளனர்.

இருப்பினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் சட்டத்தரணி ஊடாகக் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே காவல்துறையினர் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.
பின்பு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |