மாலைதீவு மணல் விவகாரம் - சாணக்கியனுக்கு அமைச்சர் பதிலடி
மாலைதீவில் தனியான தீவு ஒன்றை அமைக்க மட்டக்களப்பிலிருந்து அகழப்படும் மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்த குற்றச்சாட்டை அமைச்சர் மகிந்த அமரவீர முற்றாக நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென தெரிவித்தார்.
உள்நாட்டில் மணல் தேவை அதிகமாக உள்ள நிலையில் வெளிநாட்டிற்கு எந்த வகையிலும் மணல் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல எமது நாட்டின் பெற்றோலிய வளங்களில் இல்மனைட், சிலிக்கா உள்ளிட்ட கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவை ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக சாணக்கியன் எம்.பிக்கு எனது பதில் திருப்தியளிக்கவில்லை என்றால் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளலாம் எனவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை மாலைதீவில் கட்டட நிர்மாணப்பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்காக 8 கியூப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் கியூப் ஒன்றுக்கு 18ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டதாகவும் அந்த பணியகம் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.