தமது அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்களித்த மக்கள் தற்போது பிரச்சினையில்- வெளிப்படையாக ஒப்புக்கொண்ட மஹிந்த!
சிறிலங்காவில் அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை அமைப்பதற்கு வாக்களித்த மக்கள் தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக பிரதர் மஹிந்த ராஜபக்ச வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பிலுள்ள தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கிலுள்ள அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி அரச தலைவர் ஒருவரை நியமிக்க முடியாது என்ற நம்பிக்கை தொடர்ச்சியாக இருந்து வந்ததாகவும், எனினும் அந்த நம்பிக்கை கடந்த தேர்தலில் தகர்க்கப்பட்டதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தேசிய மட்டத்தில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விமர்சனத்தை எதிர்கொண்டது. அவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்தக் கட்சி கட்டியெழுப்பப்பட்டது. எவ்வளவு அடக்குமுறைகள் விதிக்கப்பட்டாலும் ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டோம்.
எங்களை சிறையில் அடைத்து, மக்களை இருளில் வைக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. அதன் காரணமாகவே அரசாங்கத்தை மக்கள் எங்களிடம் பொறுப்பளித்தனர். மக்களின் குரலை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் குரலை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நாம் அரசியலில் இருந்து ஒதுங்க எம்மால் தோற்கடிக்கப்பட்ட குழுவின் குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஊடுருவி பிரச்சினைகளை உருவாக்குகிறாா்கள்.
ஆகவே, பொதுஜன பெரமுன நாட்டில் நிலைக்க வேண்டுமெனில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதே மக்கள் மத்தியில் அரசியல் செய்ய வேண்டியது அவசியம். எமக்கு வாக்களித்த மக்கள் பாரிய நெருக்கடியான நிலையில் இருக்கிறாா்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இதுபோன்ற நெருக்கடி நிலைமையை எதிர்கொள்வதில் எமக்கு சிறந்த அனுபவம் இருக்கிறது. செய்யாத தவறுக்கும் மக்கள் அரசாங்கத்தையே நேரடியாக தாக்குவார்கள். இதுதான் யதார்த்தம். மக்கள் எம்மை நேரடியாக தாக்கலாம், பொம்மைகளை தீவைத்து எரிக்கலாம். அவற்றை எதிர்கொண்டு நாங்கள் மக்கள் மத்தியில் செல்லவேண்டும்.
மக்களிடம் செல்லும் அரசியலொன்று இன்று எமக்கு அவசியம் வேண்டும். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பெற்றுக்கொண்ட வெற்றிகளை வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிட முடியாது என்று நான் நம்புகிறேன்.
வடக்கு கிழக்கிலுள்ள அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி நாட்டின் தலைவரை நியமிக்க முடியாது என்ற நம்பிக்கை தொடர்ச்சியாக இருந்து வந்தது. சகல தேர்தல்களிலும் அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியிருந்தது.
இன்று எம்முடன் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கு சிறந்த சாட்சி. இருந்தபோதிலும், அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் அரச தலைவர் ஒருவரை நியமிக்க கூடிய வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.
நாம் தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து விலகியே அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று பொருள்கொள்ளக் கூடாது. அந்த இன மக்களை நெருங் முடியுமாக இருந்தால் அதுவே, பொதுஜன பெரமுன செய்யக்கூடிய சிறந்த செயற்பாடாகும்.
அதேபோன்று அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் திட்டங்களுக்கு ஏற்றவாறு செயற்படாமல் பெரும்பான்மை பலத்தை எம்மால் பெற முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.