மகிந்தவை தூக்கிலிட வேண்டும் - காட்டிக் கொடுத்த சரத் பொன்சேகா: வலுக்கும் சர்ச்சை
இராணுவத்தை காட்டிக் கொடுத்த சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவதாக மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என்றும் மனோஜ் கமகே குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரிய வித்தியாசம் உள்ளது
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஒரு சிங்கம் என்பதை சரத் பொன்சேகா புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு சிங்கம் மற்றும் தேவாங்கை பற்றி பாடமெடுக்க வேண்டியுள்ளது. சிங்கத்திற்கும் தேவாங்குக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்பதை சரத் பொன்சேகா புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிங்கம் வயதாகிவிட்டாலும் அல்லது நோய்வாய்ப்பட்டாலும், அது ஒருபோதும் புல்லை உண்ணாது. தேவாங்கு ஒரு மாமிச உண்ணி என்று அழைக்கப்பட்டாலும், சில சமயங்களில் மரங்களின் பட்டைகளை உட்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, மகிந்த ராஜபக்சவுக்கு சமூகத்தில் இருக்கும் இடத்தை சரத் பொன்சேகா புரிந்து கொள்ள வேண்டும்.
தூக்கிலிட வேண்டும்
மகிந்த ராஜபக்சவை விஜேராம இல்லத்திலிருந்து அனுப்பிய பிறகும், மக்கள் மகிந்த ராஜபக்சவை எந்த தயக்கமும் இல்லாமல் பார்க்கச் செல்கின்றனர்.
விஜேராம இல்லத்தை விட்டு தங்காலைக்குச் சென்ற முதல் இன்றுவரை வருகை தரும் மக்கள் கூட்டம், சரத் பொன்சேகாவின் ஜனாதிபதித் தேர்தல் பேரணிக்கு வந்த கூட்டத்தைப் போன்றவர்கள் என்பதை சரத் பொன்சேகா புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தநிலையில், போர் முடிந்து சிறிது நேரத்திலேயே, இந்த நாட்டின் முழு இராணுவத்தையும் காட்டிக் கொடுத்தவர் மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
