அரசாங்கத்திற்குள் பதவி மாயை - மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலை
தான் பதவி விலகப் போவதாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை மேலும் வேகமாக முன்னெடுக்க அரசாங்கத்திற்குள் இருக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பிரசார மாயையைக்குள் நாட்டின் முன்னணி பத்திரிகைகளும், செய்தி இணையத்தளங்களும் சிக்கியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்றிரவு உருவாக்கப்பட்ட இந்தப் பிரசாரத்திற்கு அமைய மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பதவி விலக அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
எனினும் இந்தப் பிரசாரத்தை பிரதமரின் ஊடக செயலாளர் உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக இதற்கு முன்னர் சில தடவைகள் செய்திகள் வெளியாகி இருந்ததுடன், அதனை பிரதமரின் செயலகமும் அவரது ஊடகப் பிரிவும் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

