பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றை நாடிய மகிந்தவிற்கு கிடைத்த முதல் வெற்றி
பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் தம்மிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மார்ச் 19 ஆம் திகதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று தசாப்தங்களாக நாட்டைப் பாதித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்காற்றிய தனது தலைமைத்துவம் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகியுள்ளநிலையில் தனது பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் படையை செப்டம்பர் 30 முதல் 60 அதிகாரிகளாகக் குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவு தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டவர்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya), வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), அமைச்சரவை, பாதுகாப்பு செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி அனுராத செனரத் மூலம் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ள மகிந்த ராஜபக்ச, நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தான் தலைமை தாங்கியதாகக் கூறியுள்ளார்.
சரியான மதிப்பீடு இன்றி நீக்கப்பட்ட பாதுகாவலர்கள்
போரை வழிநடத்தியதன் காரணமாக பயங்கரவாத அச்சுறுத்தல்களை தொடர்ந்து எதிர்கொண்டதால், தனது பாதுகாப்பிற்காக மூன்று இராணுவத் தளபதிகள், நான்கு யூனிட் கொமாண்டர்கள் மற்றும் 58 பிற வீரர்களை நியமித்ததாகவும், மேலதிகமாக, 56 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 29 காவல்துறை ஓட்டுநர்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது பாதுகாப்புக்காக 60 அதிகாரிகளை மட்டுமே விட்டுவிட்டு, மீதமுள்ள நூற்றுக்கணக்கான பாதுகாப்புக் காவலர்களை சரியான மதிப்பீடு இல்லாமல் நீக்கியதாகவும் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் தனது பாதுகாப்பிற்காக ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தன்னிச்சையாக தனது பாதுகாப்பை நீக்கியதால் தனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மகிந்த ராஜபக்ச, தனது பாதுகாப்பை நீக்கியதன் மூலம், தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீளவும் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும்
தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரும் மகிந்த ராஜபக்ச, தம்மிடமிருந்து நீக்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் மீள வழங்குவதற்கு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாருனிகா ஹெட்டிகே தனது வழக்கை முன்வைத்து, மனு தொடர்பாக பிரதிவாதிகளிடம் கலந்தாலோசித்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.
மனுதாரர் மகிந்த ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி, தனது வாடிக்கையாளரின் பாதுகாப்பைக் குறைப்பதா அல்லது அதிகரிப்பதா என்பது குறித்து முறையான பாதுகாப்பு மதிப்பீட்டிற்குப் பிறகுதான் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் பிரதிவாதிகள் எந்தவொரு பாதுகாப்பு மதிப்பீட்டும் இல்லாமல் தங்கள் வாடிக்கையாளரின் பாதுகாப்பைக் குறைத்துள்ளனர் என்றும் கூறினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த மார்ச் 19 ஆம் திகதி விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் சார்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரியதை ஏற்றுக்கொண்டு, தேவைப்பட்டால் எதிர்மனுக்களை முன்வைக்கலாம் என்று மனுதாரருக்குத் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |