“துட்டகைமுனு வழியில் நாம்” மார்தட்டும் பிரதமர் மஹிந்த
இரத்த வெள்ளத்தை தடுத்து, மரண பயத்தை ஒழித்து, எமது நாட்டை புகலிடமாக்கிய போர் வீரர்களுக்காக இந்த சந்தஹிரு சேய தூபியை அமைத்து பிரார்த்திப்பது எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்கட்டும் என்ற பிரார்த்தனையிலாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று (18) கலந்துகொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''போர் வீரர்களின் கரங்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மஹாசேயவினை இராணுவத்தினருக்காக உலகுக்கு அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டுக்காக மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து அவற்றை வெற்றியடையச் செய்ததில் நான் அளவற்ற மகிழ்ச்சியை அனுபவித்துள்ளேன். அந்தச் சமயங்களில் நான் பெற்ற மகிழ்ச்சியை விட, இந்த மாபெரும் செயலை முடித்த தருணத்தை நான் அதிகம் அனுபவிக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேயர் துரையப்பா கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை கைது செய்யச் சென்ற காவல்துறை அதிகாரி பெஸ்தியன் பிள்ளேகே, 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கோப்ரல் ஹேவாவசம் முதல் நந்திக்கடலில் இறுதி யுத்தத்தில் வீரமரணம் அடைந்த சிப்பாய் வரை அனைத்துப் போர் வீரர்கள் மற்றும் எமது நாட்டிற்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட சகல போர் வீரர்களுக்கும், அதேபோன்று யுத்தத்தில் உயிர்நீத்த சகல தரப்பினருக்கும் இத்தூபியை வணங்கும் ஒவ்வொரு நொடியிலும் நன்றி கலந்த அஞ்சலி செலுத்தப்படும்.
உயிரிழந்த அனைவரும் எமது நாட்டின் எமது மக்களே. வரலாறு முழுவதும் நாம் போர்க்களத்தில் வென்றது திறமை மற்றும் துணிச்சலால் மட்டுமல்ல. இந்த நாட்டை ஒன்றிணைத்த துட்டகைமுனு மன்னர் வரலாற்று ரீதியாக எமக்கு அறிமுகப்படுத்திய உன்னதமான மனிதாபிமான மரபுகளை நாம் இன்றும் வரலாறு முழுவதிலும் பின்பற்றுவதே இதற்குக் காரணமாகும்.
அவர் போர் முடிந்ததும் கோட்டைகளைக் கட்டவில்லை. பாரிய குளங்களும், பாரிய தாதுகோபுரங்களுமே கட்டப்பட்டன. நாங்களும் அப்படியே செய்தோம்” எனக் கூறியுள்ளார்.